திருச்சிவபுரம் வரலாறு
- முனைவர் ர.வையாபுரி ஐயா
தலம் :
திருச்சிவபுரம் என்னும் இத்தலம் காவிரித் தென்கரைத் தலங்கள் நூற்றிருபத்தேழனுள் அறுபத்தேழாவது தலமாக அமைந்துள்ளது. கும்பகோணத்துக்கு அருகில் அரிசிலாற்றங்கரையில் உள்ளது. திருஞானசம்பந்த நாயனார் அருளிய மூன்று பதிகங்கள். திருநாவுக்கரசு நாயனார் அருளிய ஒருபதிகம் ஆக நான்கு பதிகங்களைப் பெற்றது.
இத்தலத்து
இறைவன் பெயர் - பிரமபுரிநாதர், சிவபுரநாதர்
இறைவி பெயர் - பெரிய நாயகி, சிங்கார வல்லி
இரணியாட்சன் என்னும் அசுரன் பூமியைக் கடலுள் ஒளித்து வைத்தான். திருமால் வெண்பன்றி (சுவேதவராகம்) உருவாய்ச் சென்று அப்பூமியைத் தன் கொம்பினால் மீட்டு வந்தார். வெண்பன்றி உருவாய் இருந்த திருமால் இத்தலத்தில் வழிபாடு செய்தார்.
தலமரம் - சண்பகம்
பதிகம் :
திருஞானசம்பந்த நாயனார் அருளிய “புவம்வளி கனல் புனல்” என்னும் பதிகம் நட்டபாடைப் பண்ணில் அமைந்தது. மேலும் திருவிராகம் என்னும் யாப்பமைதியினையும் உடையது. இதில் இராகம் என்பது முடுகி (விரைவு)ச் செல்லும் ஓசை. இப்பதிகத்தில் வரும் சீர்களெல்லாம் குறிலிணை நிரையசைகளாகவே அமைந்துள்ளன. இவ்வோசையை இசைத்துப் பார்த்துப் புரிந்து கொள்ளுதல் வேண்டும்.
இப்பதிகம் சிவபரம்பொருள் ஐந்தொழில் செய்வதற்காகக் கொள்ளுகின்ற தடத்த வடிவங்களுள் அயன், மால், உருத்திரன், மகேசன். சதாசிவன் என்னும் வடிவங்கள் கொண்டு படைத்தல் முதலிய தொழில்களைச் செய்யும் நிலையினையும் அதற்கேற்ற வடிவங்களையும் கூறுகின்றது.
இவ்வடிவங்கள் சிவபேதம் எனப்படும். இவற்றுக்குரிய சத்தி பேதங்களும் உள்ளன. இவற்றை
சிவம்சத்தி நாதம் விந்து
சதாசிவன் திகழும் ஈசன்
உவந்தருள் உருத்திரன்தான் மால்
அயன் ஒன்றின் ஒன்றாய்ப்
பவம்தரும் அருவம்நால் இங்கு
உருவம் நால் உபயம் ஒன்றாய்
நவந்தருபேதம் ஏகநாதனே நடிப்பன் எனவும்
(சிவம் - பரநாதம்; சத்தி - பரவிந்து; நாம் - அபரநாதம்; விந்து - அபரவிந்து; பவம் தரும் - தோன்றும். நால் - நான்கு; உபயம் - இரண்டு, அருவமும் உருவமுமாகிய அருவுருவத் திருவுருவத் திருமேனி; நவம் தருபேதம் - ஒன்பது வகையாக வெளிப்படும் வடிவ, பெயர் - வேறுபாடுகள். நவம் - ஒன்பது, பேதம் - வேறுபாடு, ஏகநாதன் - ஒருவனாகிய தலைவன் - சிவம்)
“சத்தியாய் விந்து சத்தியாய் மனோன்மணி தானாகி
ஒத்துறு மகேசை யாகி உமைதிரு வாணியாகி
வைத்துறும் சிவாதிக்கு இங்ஙன் வரும் சத்தி ஒருத்தியாகும்
எத்திறம் நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பன்”
எனவும் வரும் சிவஞான சித்தியார் சுபக்கச்செய்யுள்களால் (164,165) அறியலாம்.
சத்தி - பரவிந்து, விந்து சத்தி - அபர விந்து, சிவாதிக்கு - சிவம் முதலிய பேதங்களுக்கு; ஒருத்தி - சிவசத்தி.
சிவபேத சத்தி பேதங்கள்
1. சிவம் (பரநாதம்) - சத்தி (பரவிந்து)
2. நாதம் (அபர நாதம்) - விந்து (அபர விந்து)
3. சதாசிவன் - மனோன்மணி
4. மகேசன் - மகேசை
5. உருத்திரன் - உமை
6. திருமால் - திருமகள்
7. அயன் - கலைமகள்
(சத்தி பேதம் 7, சிவபேதம் 7, சத்தி, விந்து என்னும் சத்தி பேதங்கள் சிவபேதத்துள் வைத்து எண்ணப்படும். அவ்வகையால் சிவபேதம் 9 எனப்படும்)
இப்பேதங்களைக் கடந்து நிற்கும் சிவம் சொரூப சிவம் எனப்படும். இது தத்துவாதீதம் . இந்தச் சாத்திரக் கருத்தை உணர்ந்து கொண்டு இப்பதிகத்தை ஓதினால் உண்மைப் பயன் கிடைக்கும். உணர்ந்து கொள்ளாமல் ஓதினால் தவறான உணர்வுகளுக்கு (கதைகளில் பேசப்படுகின்ற பிரம்மாவும் சிவணும் ஒருவரே. திருமாலும் சிவனும் ஒருவரே, உருத்திரனும் சிவனும் ஒருவரே. எல்லா வடிவங்களும் ஒரே கடவுளைத்தான் குறிப்பிடுகின்றன என்னும் உணர்வு) இடம் உண்டாகும்.
புண்ணியமும் தகுதியும் உடைய ஆன்மவர்க்கத்தினர் சிலர் படைத்தல் முதலிய தொழில் செய்யும் ஆசையால் சிவபரம் பொருளை வழிபட்டுப் பிரம்மா, திருமால் முதலிய பெயர்களையும் வடிவங்களையும் பெற்றுத் தொழில் செய்வர். இந்தப் பிரம்ம விஷ்ணுக்கள் வேறானவர். இவர்களே கதைகளில் பேசப்படுபவர். இவர்கள் அணுபஷத்தினர் எனப்படுவர். (அணு - ஆன்மா) மேலே குறிப்பிடப்பட்ட பேதங்கள் சம்பு பஷம் - சம்பு - சிவம், சம்பு - சிறந்த இன்பத்தைத் தருபவன் என்பது பொருள்.
மூர்த்தி தலம் தீர்த்தம் என்னும் மூன்றனுள் இப்பதிகம் தலத்தின் சிறப்பைக் கூறுவதாய் எல்லாப் பாடல்களிலும் சிவபுரம் நினைபவர் என்றே கூறிச் செல்கிறது. மூர்த்தியின் சிறப்பையும் சிவனது சிவபுரம் என இணைத்துக் கூறுகின்றது.
மூன்றாம் பாடல் “ சிவபுரநகர் தொழுமவர்” என்று கூறுகிறது. எனவே சென்றும் தொழலாம். இல்லத்திலிருந்தே நினைந்தும் தொழலாம். நினைபவர் எனவரும் இடங்களில் தொழுமவர் என்பதையும் கூட்டி நினைந்து தொழுமவர் எனவும் தொழுமவர் எனவரும் இடத்தில் நினைந்து என்பதையும் கூட்டி நினைந்து தொழுமவர் எனவும் உரைத்துக் கொள்ளுதல் வேண்டும்.
சிவபுர நகரத்துக்குச் சென்று சிவபரம்பொருளைத் தொழ வேண்டும் என்று பலகாலம் ஆசையால் நினைந்திருந்து வாய்ப்புக் கிடைத்த போது சென்று தொழ வேண்டும் என்பது கருத்து. சென்று தொழுவதைக் காட்டிலும் சென்று தொழவேண்டும் என்று நினைந்து நினைந்து நிறபதும் ஓர் அனுபவம்.