உ
சிவமயம்
சைவன் - சைவம்
- பேராசிரியர் முனைவர் ர. வையாபுரி எம்.ஏ., பிச்.டி.,
சிவபரம் பொருளை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடுபவன் சைவன். அமங்கலமாகிய மலசம்பந்தத்திலிருந்து நீங்கி மங்கலமாகிய சிவசம்பந்தத்தைப் பெற முயலுபவன் சைவன்.
இவ்வழிபாட்டுக்கும், முயற்சிக்கும் உரிய நெறியினை உணர்த்தும் சிவாகமங்கள் சைவ நூல் எனப்படும். ஆதலின் சிவாகமம் உணர்த்தும் நெறி சைவம் எனப்படும். இந்நெறியில் ஒழுகுபவன் சைவன் எனப்படுவான்.
புலால் உண்ணாமை சைவன். சிவாலய வழிபாடு செய்பவன் சைவன். எனினும், சிவநெறியில் அடிப்படைப் பொருள்களாக - என்றும் உள்ள பொருளாக-க் கூறப்படும் இறைவன், ஆன்மா, ஆணவ மலம், கன்ம மலம், மாயை (சுத்த மாயை, அசுத்த மாயை) என்னும் கொள்கையை ஏற்றுக் கொள்பவன் சைவன்.
உலகியல் அனுபவம் நிகழும் (பெத்த) நிலையிலும் சிவானுபவம் நிகழும் (சுத்த) நிலையிலும் சிவமும் ஆன்மாவும் இரண்டு என்று கருதப்படாமல் - ஒன்று என்றே கருதுமாறு - பிரிப்பின்றி (அத்துவிதமாக) க் கலந்து நிற்கின்றன என்னும் கொள்கையை ஏற்றுக் கொள்பவன் சைவன்.
முத்தி நிலையில் சிவமும் உண்டு. ஆன்மாவும் உண்டு. சிவம் ஆன்மாவுக்குச் சிவானந்தத்தைத் தருகின்றது. ஆன்மா சிவானந்தத்தைப் பெற்று அனுபவிக்கின்றோம் என்ற முனைப்பின்றி அதில் அழுந்தி நிற்கின்றது. இச்சிவானந்த அனுபவம் நிகழ்வதற்குத் திருவருள் துணை செய்கின்றது. இச்சிவானந்த அனுபவம் நிகழ ஒட்டாமல் தடை செய்வதற்குரிய ஆணவ மல சத்தி தடை செய்ய இயலாமல் ஒடுங்கி நிற்கிறது என்னும் கொள்கையினை ஏற்றுக் கொள்பவன் சைவன் எனப்படுவான்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.