Natarajar

Natarajar
ஈரோடு சைவ சித்தாந்த சபை தங்களை இனிதே வரவேற்கிறது

Wednesday, 9 July 2014

சைவ மடங்கள்

சிவமயம்

சைவ மடங்கள்
- பேராசிரியர் முனைவர் ர. வையாபுரி எம்.ஏ., பிச்.டி.,
  
    மடம். இச்சொல் தமிழில் அறியாமை என்னும் பொருளில் வழங்கப்படுகிறது. வடமொழியில் (ட - டகர வரிசையில் இரண்டாவதாக உள்ள எழுத்து) துறவிகளின் இருப்பிடம் என்னும் பொருளில் வழங்கப்படுகின்றது.
                 பழங்காலத்தில் தத்துவஞானிகளும், துறவிகளும் தனியே ஓரிடத்தில் இருந்து யோக நெறியில் பழகுதல், கடவுள் வழிபாடு செய்தல், தத்துவ ஞான நெறியில் பழகுதல், தங்களை நாடி வருபவர்களுக்கு அறநெறியினையும் தத்துவ ஞானத்தையும் கற்பித்தல் ஆகிய பணிகளைச் செய்து வந்தனர். இம்மடங்களுள் சைவ மடங்கள் பிற்காலத்தில் சைவ ஆதீனம் என்னும் பெயரில் குறிப்பிடப்பட்டன.
       பாரத நாட்டில் காஷ்மீரம் முதல் கன்னியாகுமரி வரை இத்தகைய மடங்கள் பல இருந்தன. தமிழகத்தில் சைவ சமய நெறியில் நின்ற மடங்கள் பதினெட்டு இருந்தன. இவை பதினெண் மடங்கள் என்று அல்லது சைவ ஆதீனங்கள் பதினெட்டு என்று ஒரு தொகையாகக் கூறப்படுகின்றன. அபிதான சிந்தாமணி என்னும் நூல் சுத்த சைவ பதினெண் ஆதீனங்கள் என்னும் தலைப்பில் (இரண்டாம் பதிப்பு - பக்கம் - 1609 )

01. திருவாவடுதுறை 
02. காஞ்சிபுரம்
03. தருமபுரம்
04. சூரியனார் கோயில் 
05. ஆகம சிவப்பிரகாசாதீனம் (சிதம்பரம்)
06. செங்கோல் ஆதீனம் (பெருங்குளம், திருநெல்வேலி)
07. திருஞானசம்பந்தர் ஆதீனம் (மதுரை)
08. திருவண்ணாமலை ஆதீனம் (குன்றக்குடி)
09. இராமேச்சுரம் ஆதீனம்
10. நீலப்பாடி ஆதீனம் (தஞ்சாவூர்)
11. தாயுமான சுவாமிகள் ஆதீனம் 
12. சாரமாமுனி ஆதீனம் (திருச்சிராப்பள்ளி)
13. சொர்க்கபுர ஆதீனம் (அம்பர் மாகாளம்)
14. வேளக்குறிச்சி ஆதீனம் (திருவாரூர்)
15. வள்ளலார் ஆதீனம் (சீகாழி)
16. வருணை ஆதீனம் (வேதாரணியம்)
17. நாய்ச்சியார் கோவில் ஆதீனம் (கும்பகோணம்)
18. நிரம்ப அழகிய தேசிகர் ஆதீனம் (மதுரை - துழாவூர்)

                                            என்று சைவ ஆதீனங்களின் பட்டியல் ஒன்று காணப்படுகின்றது.

             இவை பெரும்பாலும் அவையவை நிலையாகத் தங்கியிருந்து சைவ நெறியினை வளர்க்கும் பணியினைச் செய்த தலங்களின் பெயர்களாக அமைந்துள்ளன. சில ஆதீனங்கள் அவற்றை நிறுவிய ஆசாரியரின் பெயரில் அமைந்துள்ளன. 

         இன்றைய நிலையில் திருவாவடுதுறை ஆதீனம், தருமபுர ஆதீனம், சூரியனார் கோயில் ஆதீனம் , மதுரை ஆதீனம் ஆகியவை பலராலும் நன்கு அறியப்பட்ட ஆதீனங்களாக விளங்குகின்றன. பல ஆதீனங்கள் பெயரளவில் அறியப்படுவனவாக உள்ளன. இவையன்றி வீரசைவ ஆதீனங்களும் பல உள்ளன.

குறிப்பு :- 
             சைவ ஆதீனங்கள், வீர சைவ ஆதீனங்கள் என்னும் பெயரில் ஊரன் அடிகள் (வடலூர்) என்பவர் அரிதின் முயன்று வரலாற்று நூல்கள் எழுதியுள்ளார்கள்.

 


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.