Natarajar

Natarajar
ஈரோடு சைவ சித்தாந்த சபை தங்களை இனிதே வரவேற்கிறது

Friday, 22 August 2014

திருநடனம்

திருநடனம்

- பேராசிரியர் முனைவர் ர. வையாபுரி எம்.ஏ., பிச்.டி.,

           நடனம், நடம், நாட்டியம், நிருத்தம், நாடகம், கூத்து என்னும் சொற்கள் அனைவரும் கேட்டிருப்போம். நடனம், நடம், நாட்டியம், நிருத்தம் என்பன ஒருவரே நிகழ்த்துவது. நாடகம், கூத்து என்பன பலர் கூடி வேடம் அணிந்து நிகழ்த்துவது

    நடனம் ஆடுபவரும் நாடகம் நடிப்பவரும் உரையாடலினாலும் பாடலினாலும் நகை, அச்சம், கோபம், வீரம், வியப்பு, சாந்தம் முதலிய குறிப்புகளை முகக் குறிப்பு, கண் குறிப்பு, அங்க அசைவு முதலியவற்றுடன் கூட்டி வெளிப்படுத்துவார்கள். இவை காண்பவரிடத்தும் பற்றிக் கொள்ளும். நடனம் ஆடுபவரும் நாடகம் நடிப்பவரும் நகை, அழுகை முதலியவற்றை வெளிப்படுத்தி அந்த அந்தக் கதை மாந்தர்களாகவே காணப்பட்டாலும் உண்மையில் அவர்கள் அந்தக் கதை மாந்தர்களின் வேறாகவே இருப்பார்கள்.

        இது நாம் கண்டு மகிழ்கின்ற நாடகம். நாம் காணாமலே நிகழ்கின்ற நாட்டியம் - நாடகம் - ஒன்று உண்டு. நாடகம் ஆடுபவனை நாம் காண்பதில்லை. ஆனால் நாம் அந்த நாடகத்தில் அகப்பட்டு ஆடுகிறோம். அவன் தன் நாடகத்தால் - நாட்டியத்தால் - நம்மை ஆட்டி வைக்கிறான்.

           அவன் யார் ? அவன் தான் இறைவன். அவன் தனக்கு ஒருபயன் கருதி ஆடுவதில்லை. நாம் பயன் பெறுவதற்காக ஆடுகிறான். அவனை ஆடும் பெருமான், ஆடல் வல்லான், நடேசன், நடராஜன், கூத்தன், கூத்தப் பெருமான் எனப் பல பெயர்களால் குறிப்பிடகின்றோம்.

        அவன் ஆடுவற்குத் துணையாய் இருப்பவர் ஒருவர் மட்டுமே. அவர் எப்பொழுதும் அவனை விட்டுப் பிரிவதில்லை. அவர் யார் ? அவர்தான் அவ்விறைவனின் சக்தி. சத்தியை நாம் சிவகாமியம்மை, அம்பிகை, அம்பாள் என்ற பெயர்களால் பெண் வடிவத்தில் குறிப்பிடுகின்றோம். இச்சத்தி இறைவன் ஆடும் நடனத்தில் இரண்டு வேடம் உடையவளாகப் பங்கு பெறுகிறாள். ஒரு வேடம் அருட்சத்தி எனப்படுகிறது. மற்றொரு மறைப்புச் சத்தி (திரோதான சத்தி) எனப்படுகின்றது.

                              இறைவன் நடனம் செய்வதற்கு இடமாயிருப்பது ஞான ஆகாசம் - சிதம்பரம். மற்றும் மாயையின் காரியமான தத்துவங்களால் ஆகிய உலகம் - பிரபஞ்சம். இவையன்றி - நம்முடைய - ஆன்மாக்களினுடைய - அறிவு இடமாகும்

           நாடகத்தில் இறைவன் என்னென்ன குறிப்பை வெளிப்படுத்த வேண்டுமோ அதற்கேற்ப வேடமும் புனைந்து கொள்வான். ஆனால் அவன் அந்தந்த வேடங்களினால் விகாரம் அடைய மாட்டான். தன் உண்மை நிலையில் திரிபு அடைய மாட்டான். அவன் ஆடும் நாட்டியத்தில் தான் செய்யப்போகும் தொழிலுக்கு ஏற்ற குறிப்புகளைத் தன் அவயவத்தால் வெளிப்படுத்துவான். அவன் ஆடும் நாடகத்தின் - நாட்டியத்தின் - குறிக்கோள் நம் அறிவில் - ஆன்மாக்களின் அறிவில் - அநாதியே கலந்து நின்று அறிவு விளக்கத்தைத் தடை செய்து கொண்டிருக்கும் பொருளாகிய ஆணவ மலத்தின் சத்தியை மெலியச்செய்து மீண்டும் மேலெழாதபடி அடங்கியிருக்கச் செய்வதேயாகும். இதற்கு அவன் இரண்டு பொருள்களைக் கருவியாகப் பயன்படுத்துகின்றான். அவை யாவை? மாயை என்றும் கன்மம் என்றும் சொல்லப்படும் மலங்கள்.

                  மாயை , கன்மம் என்னும் கருவிகளைத் தன் துணையாகிய திரோதான சத்தியைினால் இயங்க வைக்கின்றான். இதனால் நமக்கு - ஆன்மாக்களுக்கு - உலக அனுபவம் - வினை செய்தல், வினையின் பயனாகிய இன்பத் துன்பங்களை அனுபவித்தல் - இறத்தல் , பிறத்தல் உண்டாகின்றன. இதனால் நம் - ஆன்மாக்களின் - அறிவில் கலந்துள்ள ஆணவமல சத்தி மெலிவடைகின்றது.

                                        மெலிவடைந்த மலசத்தி மீண்டும் மேலெழாதபடி அடங்கிக் கிடக்கச் செய்வதற்குத் தனது ஞானம் என்னும் கருவியைப் பயன்படுத்துகின்றான். இதனைத் தனது அருட்சத்தி என்னும் துணையினால் நிகழச் செய்கிறான். இதனால் நமக்கு - ஆன்மாக்களுக்கு - சிவானந்தம் விளைகிறது. எனவே நமது - ஆன்மாக்களின் - உலக வாழ்வுக்கும் இறைவனுடைய நடனம் தேவை; முத்திப் பேற்றுக்கும் தேவை என்பதை உணர்தல் வேண்டும்.

                        இந்த நடனம் ஐந்தொழில் திருக்கூத்து எனப்படும். இது ஊன நடனம், ஞான நடனம் என இருவகைப்படும். ஊன நடனம் - ஊனம் - குறைவுடைய கன்ம அனுபவங்களைத் தரும் நடனம். அதாவது “ந” என்னும் எழுத்தால் குறிப்பிடப்படும் திரோதான சத்தியால் மாயை, கன்மங்களைத் தொழிற்படுத்தி ஆன்மாவுக்கு உலக அனுபவத்தைக் கொடுப்பது. இதனால் “ம” என்னும் எழுத்தால் குறிப்பிடப்படும் ஆணவ மலத்தின் சத்தியை மெலிவடையச் செய்வது. கன்ம அனுபவம் ஆணவமல சத்தி குறையும் வரையிலும் தரப்படும். பின்பு நீக்கப்படும். அவ்வனுபவம் பிறப்பு, இறப்புக்களுக்குக் காரணம். அதனால் அது ஊனம் எனப்படும்.

                  ஞான நடனம் என்பது “வ” என்னும் எழுத்தால் குறிப்பிடப்படும் திருவருட் சத்தியினால் சிவஞானத்தை அளித்து அதனால் சிவானுவபத்தைக் கொடுப்பது. சிவானுபவமே ஆன்மாவுக்கு உதிய அனுபவம். இது குறைதலும் இல்லை. நீங்குதலும் இல்லை. மேன்மேலும் வளர்தோங்குவது. இது சிவஞானத்தால் நிகழ்வது ஆதலின் ஞான நடனம் எனப்படும். இதுவே முத்தியைத் தருவது. இதைப் பெற்ற ஆன்மாவுக்கு மீளப் பிறத்தல் இல்லை.

         ஊன நடனம் முன்னர் நிகழ்ந்தால் தான் பின்னர் ஞான நடனம் நிகழ்வதற்கு வழி ஏற்படும். ஆதலின் ஊன நடனமும் - கன்ம அனுபவமும் - உலகியல் அனுபவமும் - வேண்டத்தக்கதே. சிவயநம என்பதில் “ய” - ஆன்மா - நடுவில் நிற்கிறது. இடப்பக்கத்தில் “ந ம” - ஊன நடனம். வலப்பக்கத்தில் “சி வ” - ஞான நடனம். கன்ம அனுபவத்தின் போது மந்திரம் - நமசிவய. ஞான அனுபவத்தின் போது மந்திரம் - சிவயநம. நமசிவய என்பது இறைவனுக்குப் பெயம் ஆகும்.

ஐந்தொழில் திருக்கூத்தில் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் நான்கும் ஊன நடனம். அருளல் - ஞான நடனம். படைத்தல், காத்தல், அழித்தல் என்பன உடம்பிலும் உலகத்திலும் நடைபெறும். மறைத்தல், அருளல் என்பன ஆன்ம அறிவில் நிகழும். ஊன நடனம் பெத்த (மலத்தில் கட்டுப்பட்டிருக்கும் நிலை) நிலை. ஞான நடனம் முத்தி நிலை. ஆனந்த நிலை.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.