Natarajar

Natarajar
ஈரோடு சைவ சித்தாந்த சபை தங்களை இனிதே வரவேற்கிறது

Friday, 19 December 2014

தாயுமானார்

தாயுமானார் 
                                                                     - முனைவர் ர.வையாபுரி ஐயா அவர்கள்

             இவர்  திருமறைக்காடு என்னும் தலத்தைச் சார்ந்த சைவ வேளாளரான கேடிலியப்பர் கெஜவல்லியம்மை என்பார்க்கு மகவாகத் திருச்சிராப்பள்ளி என்னும் தலத்து இறைவனாகிய தாயுமானார் திருவருளால் தோன்றிவர்.

                இவர் பிறந்த காலத்து இவருடைய தந்தையார் திருச்சிராப்பள்ளியில் இருந்து அரசு செய்த விஜயரங்க சொக்கநாத நாயக்கருக்கு அணுக்கராய் அரசு அலுவல்களைக் கவனித்து வந்தார்.

                தாயுமானார் இளம்பருவத்தில் கற்க வேண்டிய உலகியல் கல்வியுடன் ஞானநூல் கல்வியும் பெற்றுச் சிறந்து விளங்கித் தந்தையாருக்குப் பின் அந்நாயக்க மன்னரிடத்துத் தந்தையைப் போலவே அணுக்கராய் அரசு அலுவல்களைக் கவனித்து வந்தார்.

                     எனினும் தாயுமானார்  உள்ளம் இறையருள் நாட்டத்திலேயே இருந்தது. அப்பொழுது திருமூலதேவ நாயனாரின் மரபினரும் மெய்கண்டாரது அத்துவிதக் கோட்பாட்டில் தெளிவுடையவரும் சிவஞான சித்தியை வழிகாட்டும் நூலாகக் கொண்டவருமாகிய மௌனகுரு என்பவரின் உபதேசம் இத்தாயுமானாருக்குக் கிடைத்தது.

                    இத்தாயுமானார் பின்னர் சிலகாலம் உலகியல் வாழ்வை மேற்கொண்டிருந்து பின்னர் துறவு வேட்கை உடையராய் முழுத் துறவு மேற்கொண்டு பல தலங்களை வழிபட்டு இராமேச்சுரம் சென்று வழிபட்டு இராமநாதபுரத்தின் பாங்கர்த் தங்கியிருந்து திருவடியடைந்தார்.

                  இவர் சிவயோக நெறியிலும் சிவஞான சித்தி நூலிலும் வல்லவராய்த் திகழ்ந்தார். தம் அனுபவங்களையெல்லாம் விருத்தப்பாக்களாகவும் கண்ணிகளாகவும் பாடி வைத்தார்.

                     இவர் காலம் கி.பி 18 ஆம் நூற்றாண்டு என்பர்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.